அண்மையில்
மகர சிறைச்சாலையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தின் போது கடும்
தாக்குதலுக்கு இலக்காகி ராகம வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில்
கால்களும், கைகளும் இரும்புச்சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சிகிச்சை
பெற்று வரும் முத்துராசா டில்ருக்ஸன் என்ற இளைஞன் கடந்த ஐந்து
வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன தனது மகன் என மன்னார் இலுப்பைக்கடவையைச்
சேர்ந்த முத்துராசா றீசா என்ற தாய் அடையாளம் காட்டியுள்ளார்.
இவர் தனது கணவர், பிள்ளைகள் மற்றும்
உறவினர்கள் என சுமார் 12 பேருடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை
மன்னாருக்கு வருகை தந்து மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மற்றும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரைச் சந்தித்துத் தனது மகனின் உயிரை
காப்பாற்றுமாறும் அவரின் விடுதலைக்கு ஆவன செய்யுமாறும் கதறிக் கண்ணீர்
சிந்தியவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டார் சென்றார்
குறித்த இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
மாந்தை மேற்கு உதவி அரச அதிபர்
பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை என்ற கிராமத்தைச் சேர்ந்த முத்துராசா
டில்ருக்ஸன் என்ற குறித்த இளைஞன் 2006 ஆம் ஆண்டு தொழில் வாய்ப்பைத் தேடி
மத்திய கிழக்கு நாடான கட்டாருக்குச் சென்றார்.
பின் அங்கிருந்தவாறு தனது பெற்றோருடன்
அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
25 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக மன்னார்
இலுப்பைக்கடவைக்குச் சென்றார்.
கடற்படையால் கைது
பின்னர் அங்கிருந்து கடல் மார்க்கமாகத்
தலைமன்னார் பகுதிக்குப் படகில் சென்ற போது பேசாலைப் பகுதியில் வைத்துக்
கடற்படையினர் குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ருக்சன் மன்னார் முருங்கனில் இருந்த களிமோட்டை சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த வேளையில் இலுப்பைக்கடவையில் இருந்த தனது பெற்றோருடனும், சகோதரர்களுடனும் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வன்னியில் ஏற்பட்ட போர்
காரணமாக இவரது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து சென்று இருட்டுமடு பகுதியில்
வாழ்ந்த நிலையில் பின்னர் செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில்
தங்கவைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து டில்ருக்ஸனுக்கும் அவருடைய பெற்றோருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
ராகம ஆஸ்பத்திரியில்
இந்த நிலையில் இவரின் உறவினர்களினால்
டில்ருக்ஸன் தொடர்பான விவரங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச
செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்கையில், கடந்த 5 ஆம்
திகதி ஊடகங்களில் டில்ருக்ஸன் என்ற இளைஞன் கடுமையாகத்தாக்கப்பட்டுச்
சுயநினைவற்ற நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்த
அவரது தாயாரும் உறவினர்களும் பதறினர்.
அதை அடுத்து கடந்த 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அங்கு சென்ற தாயாரும் உறவினர்களும் ருக்ஸனை அடையாளம் கண்டு அழுது குழறினர்.
தனது மகன் ருக்ஸன் (வயது29) படுமோசமான
நிலையில் சுயநினைவின்றி கட்டிலில் கை, கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில்
கிடப்பதைக் கண்டு கதறினார் அவரது தாயார்.
மகனுக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்த
தாயார் "எனது மகன் ருக்ஸனைக் காப்பாற்றி மீட்டுத் தாருங்கள்;
சுயநினைவின்றிக் கிடக்கும் என் பிள்ளையை இப்படி சங்கிலியால் பிணைத்து
வைத்திருப்பது நியாயமா; இந்த அநியாயத்தைக் கேட்க எவருமில்லையா?'' என்று
அந்தத் தாய் ஓலமிடுகிறார்.
No comments:
Post a Comment