தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் உள்ள பாதுகாப்புப்
படையதிகாரிகளுக்கான கல்லூரிக்கு பயிற்சிக்காக வந்திருக்கும் இலங்கை
படையதிகாரிகளை உடனடியாக இலங்கைக்கே திருப்பியனுப்ப வேண்டுமென்று முதல்வர்
ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்குக்
கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் பின்னணியில், அவர்கள்
பெங்களூர் அருகே உள்ள யேலஹெங்கா தளத்திற்கு மாற்றப்பட்டதையும் ஜெயலலிதா
கண்டித்திருக்கிறார்.
அத்தகைய நடவடிக்கைகள் தமிழர்களைப் புண்படுத்தும் செயல்கள் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டுமென்றும்,
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யும் நிரந்தர அரசியல் தீர்வு
வேண்டும் என்றும் கோரும் தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு
உதாசீனப்படுத்துவதாகவும் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கை படையினருக்கு இவ்வாறு தொடர்ந்தும் பயிற்சி அளிப்பதுவருவது
ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல, எனவே வெலிங்டன் வந்துள்ள இரு அதிகாரிகளும்
உடனடியாகத் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்றும் இலங்கை படையினருக்கு
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படக்கூடாது எனவும்
ஜெயலலிதாவின் கடிதம் வலியுறுத்துகிறது.
வெலிங்டனில் அமைந்துள்ள கல்லூரியில் பயிற்சிபெற அவ்வப்போது பல நாடுகளிலிருந்தும் வீரர்கள் வருவது வழக்கம்.
அவ்வகையில், வியட்நாம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25
அதிகாரிகள் தற்போது அங்கு வந்திருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக் கிழமையும் நேற்றும் வெலிங்டன் அருகே உள்ள குன்னூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையிலிருந்து வந்திருக்கும் இருவரும், அவர்களது பயணத்திட்டப்படியே இன்று இலங்கை திரும்புவர் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment