மன்னார்
நீதிபதியை அச்சுறுத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மன்னார்
நீதிமன்றம் மீது தாக்குதலை மேற்கொண்ட தாக்குதலாளிகள் ஆகியோர் கைது
செய்யப்படும் வரை தமது பணிப்புறக்கணிப்புத் தொடரும் என்று வடக்கு மாகாணச்
சட்டத்தரணிகள் நேற்று மன்னாரில் வைத்து அறிவித்துள்ளனர்.
நேற்று மன்னார் நீதிமன்றத்தின் முன்பாக வடக்கு மகாணத்தில் உள்ள
அனைத்துச் சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த
ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மன்னார் நீதிபதி அச்சுறுத்தப்பட்டமை, நீதிமன்றம் தாக்கப்பட்டமை
ஆகியவற்றைக் கண்டித்தும் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக்
கைது செய்யுமாறு கோரியும் இந்த ஆர்பபட்ட நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,
மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இதில் கலந்துகொண்டு
எதிர்ப்பை வெளியிட்டனர்.
நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னால்
ஆர்ப்பட்டம் ஆரம்பமானது. பின்னர் சட்டத்தரணிகள் மன்னார் பிரதான பாலத்துக்கு
அருகில் நின்று கோஷங்களை எழுப்பினர்.
இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்யப்பட வேண்டும் எனவும்,
தாக்குதலாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று
இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் அமைச்சர் றிஷாத்
பதியுதீனையும், தாக்குதலாளிகளையும் கைது செய்யும் வரை தமது
பணிப்புறக்கணிப்புத் தொடரும் என அறிவித்தனர்.
இதேவேளை
மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் மன்னார் நீதிமன்றக் கட்டடத்
தொகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை என்பவற்றைக் கண்டித்தும் மற்றும்
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரி வடமாகாண
சட்டத்தரணிகள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.
இதனால் வடமாகாணத்திலுள்ள நீதிமன்றங்களது செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பித
நிலையிலேயே உள்ளன. வழக்குகள் யாவும் பிறிதொரு திகதிக்குப்
பிற்போடப்படுகின்றன.
சில நீதிமன்றங்களில் எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழக்குகள் பிறிதொரு
திகதிக்குள் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி நீதிமன்ற விளம்பரப் பலகையில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அநேகமான நீதிவான்களும் பணிகளைப்
புறக்கணித்துள்ளன.
No comments:
Post a Comment