Tuesday, July 17, 2012

அடிமைகளாக வாழ தயார் இல்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் தேர்தல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்: சம்பந்தன்!

தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் அடிமைகளாக மற்றும் இரண்டாம் தரப்பிரஸைகளாக வாழ்வதற்கு தயாராக இல்லை என்பதை கிழக்கு மாகாண சபைத்தேர்தல் மூலம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.


எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இனி மேலும் தமிழ்ப் பேசும் மக்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியில் தலைமை வேட்பாளர் சி. தண்டாயுதபாணியினால் இன்று திங்கட்கிழமை காலை மாவட்டச் செயலகத்தில் திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்று திங்கட்கிழமை மாலை தனது இல்லத்தில் பட்டியலில் உள்ள வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் திருகோணமலை கிளை தலைவருமான க.துரைரெட்னசிங்கம் தலைமையில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன்,
“நாட்டின் இறைமை என்பது ஒரு தனி இனத்திற்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. இறைமையை பயன்படுத்துவதில் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.
அதற்கேற்ற வகையில் நாட்டின் அரசமைப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும். இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாம் கோருகின்றோம். வடக்கு கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை.
இணைப்பை உயர் நீதிமன்றம் தவறானது என்று தீர்ப்பளிக்கவில்லை. இணைப்பை அப்போதைய ஜனாதிபதி ஏற்படுத்திய விதம் தான் தப்பானது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படும் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அடி பணிந்து அடிமையாக செயல்படக்கூடாது. அவ்வாறான முதலமைச்சர் பதவி எமக்கு தேவையில்லை.
இறைமையின் படி கிடைக்கும் அதிகாரங்களை செயற்படுத்தக்கூடிய முதலமைச்சர் பதவியே எமக்கு தேவை என்பதை தமிழ் பேசும் மக்கள் செயலில் நிருபித்து காட்ட வேண்டும்.
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் தேர்தல் தமிழ் பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். நிலைத்து நிற்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் பெற்றுகொள்ளக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.
இவ்வேளையில் இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரங்களை மேலும் பலப்படுத்துவதற்கு இத்தேர்தலை தமிழ் பேசும் மக்கள் உச்ச கட்டமாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment