யுத்தத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோதும்
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை. அதனால்தான் தமிழர்களை தேடி
அழிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது என்று ஜனநாயக மக்கள்
முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து
உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷன் மரியதாஸின் இறுதிச்சடங்கு
நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
“இலங்கைத் தீவில் நாய்களுக்கு கொடுக்கின்ற உரிமைகூட தமிழ மக்களுக்கு
மறுக்கப்பட்டுள்ளது. மிருக வதைகளுக்காக நாட்டில் சட்டங்களை உருவாக்கும்
அரசாங்கம் – மனிதர்களின் உயிர்களை பறிப்பது எந்தவிதமான நியாமமாகும்.
நிமலரூபன், டில்ருக்ஷன் போன்று இன்னும் படுகொலைகள் தொடரத்தான் போகின்றன.
இதற்காக மக்கள் – ஜனநாயக வழியில் வீதியில் இறங்கிப்போராடுவதைத் தவிர வேறு
வழியில்லை. ஜனநாயக வழி மூலமான போராட்டத்தின் ஊடாகத்தான் தமிழ் மக்கள் மீதான
அரசின் ஒடுக்குமுறையினை சர்வதேச ரீதியில் வெளிக்கொணர முடியும்” என்று மனோ
கணேசன் இரங்கலுரையில் மேலும் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
அங்கு உரையாற்றும் போது “இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது.
இங்கு தமிழர்களின் வாழ்கை என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது” என்றார்.
“நாங்கள் பலமாக இருக்கும் போது சர்வதேச நாடுகளும் எங்களுடன் கைகோர்த்து
நின்றது. இப்போது சர்வதேச நாடுகளும் வேறு திசைக்கு மாறிவிட்ட நிலை
காணப்படுகிறது. நாங்கள் உங்கள் உரிமைக்காக ஒன்று திரண்டு போராடும்போது
சர்வதேசமும் எங்கள் பக்கம் இருக்கும்” என்று தொடர்ந்தும் சிறிதரன்
குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றும்போது “அரசியல்
கொலை செய்வதில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. தமிழ் மக்கள்
கொல்லப்படுகின்றபோது அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான
கொலைகள் தொடராமல் இருக்க மக்கள் வீதியில் இறங்கிப்போராட வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
அத்துடன் “வவுனியா சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தின்போது கொல்லப்பட்ட
நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷன் அகியோரின் மரணத்துடன் தொடர்புடைய
அதிகாரிகள் நீதியின் முன்னிறுத்தி தண்டிக்கப்படாவிட்டால் தமிழ் மக்கள்
மீண்டுமொரு முள்ளிவாய்க்காலை சந்திக்கநேரிடும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இறுதிச் சடங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி ஆகியோர் இரங்கல் உரை
நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment