தமிழ்
மக்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வுகாண தமிழர் தாயகங்களிலிருந்து
இராணுவத்தினை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய
உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிடம் இவ்விடயத்தை எடுத்துரைத்திருப்பதாக
அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும்
இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிதொடக்கம், 7.15 வரை
யாழ்நகரிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்
பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் இவ்வாறு
தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கம்
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 3 ஆயிரம் தொடக்கம் 4ஆயிரம் வரையான மக்களே
தங்கியிருப்பதாக தெரிவித்து வரும் நிலையில், கடந்த 22 வருடங்களாக
இடம்பெயர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே
அரசாங்கம் கூறும் கருத்துகளில் எந்த உண்மையும் கிடையாது.
மேலும் இந்தப் பிரச்சினை வட, கிழக்கு முழுவதுமுள்ள
பிரச்சினையாகவேயிருக்கின்றது. இதேபோல் யுத்தம் நிறைவடைந்த பின்னரும்
இராணுவத்தினரின் புதிய முகாம்கள் அமைக்கப்படுகின்றமை, மற்றும் ஏற்கனவே
இருந்த முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றமை தொடர்பில்
எடுத்துக்காட்டியிருந்தோம். இதனடிப்படையில் இராணுவமே இன்று தமிழர்கள்
எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை
எடுத்துக்காட்டினோம். மேலும் இராணுவம் தொடர்ந்திருப்பதால் மக்களுக்கு
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படாது என்பதையும் தமிழர்களின் வாழ் நிலம்
அபகரிக்கப்படுவதையும் தமிழர் தாயகப்பகுதியில் அமைதியான சூழல் ஏற்படாது.
இதேபோல் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு குறித்து
கேட்டிருந்தோம். அதற்கு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசுவது தொடர்பாக
அவர்கள் தெரிவித்திருந்தனர். அதன் மூலமே அரசாங்கம் எவற்றை பேசுகின்றது.
எவற்றைச் செய்கின்றது என்பது தொடர்பாக தெரியவரும் என்பதையும் அவர்கள்
சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கு கடந்த ஒரு வருட காலமாக பேச்சுவார்த்தை
நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை
ஆனாலும் தொடர்ந்தும் பேசுவதன் மூலமே சில விடயங்கள் தெரியவரும் என்பதை
அவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள்
குறித்தும் எமது பகுதி மீனவர்களின் பாதிப்புகள் குறித்தும்
பேசியிருந்ததுடன், இருநாட்டு மீனவர்களையும் பேச வைப்பதன் மூலமே இதற்கொரு
தீர்வு காண முடியும்.
இதேபோல் ஆழ்கடல் மீன்பிடி முறையை ஊக்குவிக்க வேண்டும் என
தெரிவித்திருந்தோம். மேலும் அதற்கான அடிப்படைகளை இந்தியா பெற்றுக் கொடுக்க
வேண்டும் என கேட்டிருந்தோம். மேலும் இதேபோல் தற்போது ஆழ்கடல் மீன்பிடிப்
படகு ஒன்று மட்டுமே இருப்பதையும் அதற்கான துறைமுகம் தற்போது உயர்பாதுகாப்பு
வலயத்தினுள் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment